பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அஞ்சல் பகுதிக்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டில் தங்கினார்.

மறுநாள் உத்ரா நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருப்பதை கண்ட தாயார் அவரை எழுப்ப முயன்றார்.

அப்போது அசைவற்று கிடந்த உத்ராவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உத்ரா பாம்பு கடித்து இறந்ததாக தெரிவித்தனர்.

ஆனால் உத்ராவின் சாவில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். உத்ரா இறந்த பின்பு அவரது கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்டனர்.

இதையடுத்து சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சூரஜ் மனைவியின் நகைக்காக அவர் மீது பாம்பை ஏவி விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

சூரஜ், மனைவிக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்தார். இதனால் அதிர்ச்சி உத்ரா, கணவரிடம் கேட்டதால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சூரஜ் மனைவியை கொல்ல திட்டமிட்டார். இதற்காக ரூ.10 ஆயிரம் கொடுத்து மீண்டும் ஒரு பாம்பை விலைக்கு வாங்கினார். கடந்த 6-ந் தேதி பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உத்ராவை பார்ப்பதற்காக சென்றார். அப்போது ஒரு பையில் பாம்பையும் எடுத்து சென்றார். அன்று இரவு 12 மணி வரை மனைவியுடன் பேசி கொண்டிருந்தார். உத்ரா தூங்கிய பின்பு அவர் மீது பாம்பை ஏவி விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார்.

காலையில் எதுவும் தெரியாதது போல் நாடகமாடினார். ஆனால், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டார். இதையடுத்து சூரஜை போலீசார் கைது செய்தனர்.

You might also like
error: Content is protected !!