வடக்கு-கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படுகிறது!

வடக்கு-கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

“வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப் படுத்தவேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குப் பொற்காலமாக இருக்கும்.

கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகிறது. எனினும் நாடு இராணுவமயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற – தகுதியான இராணுவ அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது?

இராணுவத்தை அதிகமாகப் பயன்படுத்தி நாட்டின் சேவையைப் பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார். நாட்டை இராணுவ மயமாக்கவேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கவும் இல்லை, இராணுவத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும் நினைக்கமாட்டார்” என்றார்.

You might also like
error: Content is protected !!