பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் நான்கு அதிகாரிகள் பணி நீக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நான்கு பொலிஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டது.

இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் சார்ஜென்ட் இருவர் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொலிஸ் அதிகாரிகள், பெருந்தொகை தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு உதவியதாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ஜூன் 28ம் திகதி, ரூ. ஒரு மில்லியன் ரொக்கப் பணம், ஒரு ஜீப் வண்டி மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பல பொருட்களுடன் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள், போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலின் மூலமாக 31.1 மில்லியன் ரூபாவினை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் போதைபொருள் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவினை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Content is protected !!