தமிழரின்பிரதிநிதிகள் என சொல்வதற்கு பொருத்தமற்றது கூட்டமைப்பு -முன்னாள் எம்.பி சாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களுக்கு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்வதற்கு பொருத்தமற்றவர்கள் என கேடயச்சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி கடந்த காலங்களில் வாக்குகளை பெற்று வந்துள்ளனர்.

ஆனால் அந்த நிலைமை இன்று மாறிவிட்டது. ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்திற்குள் தீர்வு, தைபொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு, இந்த வருடத்திற்குள் சர்வதேச விசாரணை, என காலம் காலமாக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வந்துள்ளனர்.

ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை. அதற்குரிய முயற்சிகளை இவர்கள் இதய சுத்தியுடன் மேற்கொள்ளவில்லை. இதனை இன்று மக்கள் நன்குணர்நதுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் முன் வரும் இவர்கள் சர்வதேசத்திற்கு ஒற்றுமையை காட்ட, பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த தங்களுக்கு வாக்களியுங்கள் என்றவர்கள் வாக்குகளை பெற்ற பின்னர் மக்களை மறந்துவிட்டு தங்களின் சுகபோகங்களுக்கு பேரம் பேசுகின்ற கைகரியங்களில் மிகச் சிறப்பாக ஈடுப்பட்டு தங்களை அனைத்து வழிகளிலும் பலப்படுத்திக்கொண்டனர்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசின் பங்காளியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்களின் நலன்களிலிருந்து பேரம் பேசியிருந்தால் பல விடயங்களை சாதித்திருக்கலாம்.

தொழிலின்றி பெரும் நெருக்கடிக்குள் உள்ள எம் இளம் சமூகத்தின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அவர்கள் எதனையும் செய்யவில்லை. இந்த நல்லாட்சி என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு நடந்த ஆட்சியில்தான் எங்கள் பிரதேசங்களில் அதிகரித்த வன்முறைகள் நிறைந்த காலமாகவும், தமிழ் மக்களின் வரலாற்று இடங்கள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்ட காலமாகவும், அதிகளவான தென்னிலங்கை இளைஞர்கள் வடக்கில் வேலைவாய்ப்பை பெற்ற காலமாகவும் காணப்பட்டுள்ளது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களுக்கு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்வதற்கு பொருத்தமற்றவர்கள். மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள் எனவே இவர்களை நம்பி இனியும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

ஆகவே கடந்த காலத்தில் நாம் செய்த எமது பணிகளையும், கடந்த காலத்தில் அவர்கள் மக்களுக்கு செய்த பணிகளையும் சீர்தூக்கி பார்த்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

You might also like
error: Content is protected !!